சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சமூக நலத்துறை அலுவலகத்தில் போராட்டம்
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சமூக நலத்துறை அலுவலகத்தில் போராட்டம்
ADDED : ஏப் 25, 2025 01:15 AM

சென்னை:அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்கக்கோரி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், சென்னையில் உள்ள சமூக நலத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டம் குறித்து, சங்கத்தின் சென்னை மாவட்ட செயலர் தேவிகா கூறியதாவது:
ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான, ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, தி.மு.க.,வினர் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தனர்.
தி.மு.க., வெற்றி பெற்று நான்கு ஆண்டுகளாகியும், வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ளனர். இதை முதல்வருக்கு நினைவூட்ட, நான்கு ஆண்டுகளில் பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம்.
தற்போது, மோப்ப நாய்களுக்கு ஓய்வூதியமாக, மாதம் 3,000 முதல் 5,000 ரூபாய் அரசு வழங்குகிறது. ஆனால், குழந்தைகளுக்காக சமைத்த எங்களுக்கு, 2,000 ரூபாய் மட்டுமே வழங்குகிறது.
எனவே, அனைத்து துறை அதிகாரிகளுக்கும் வழங்குவதை போல, எங்களுக்கும் 6,750 ரூபாய் ஓய்வூதியத்தை அரசு வழங்க வேண்டும். பணியின் போது அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தியது.
ஓய்வு பெற்றபின், அதை நிறுத்தி விட்டது. அதை தொடர வேண்டும். ஈமச்சடங்கு நிதியாக, 25,000 ரூபாய் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.