சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் பிப்., 3 முதல் தொடர் வேலை நிறுத்தம்
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் பிப்., 3 முதல் தொடர் வேலை நிறுத்தம்
ADDED : ஜன 08, 2026 01:11 AM

சென்னை: சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்; பிப்., 3 முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து உள்ளனர்.
முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியின்படி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக மாதம் 6,750 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம், தமிழகம் முழுதும் நேற்று கலெக்டர் அலுவலகங்கள் முன் நடந்தது.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு, கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயமலை தலைமை வகித்தார்.
போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின், மாயமலை அளித்த பேட்டி:
கடந்த சட்டசபை தேர்தலின் போது, 'அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்படுவர். ஓய்வூதியமாக மாதம் 6,750 ரூபாய் வழங்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
ஆனால், அவர் முதல்வரான பின், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்கள் கோரிக்கைகளை முதல்வர் ஏற்காவிட்டால், வரும் 30ம் தேதி சென்னையில் பேரணி, பிப்., 3 முதல், மாநிலம் முழுதும் உள்ள அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களை மூடி, தொடர் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

