24 மாவட்ட தலைநகரங்களில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
24 மாவட்ட தலைநகரங்களில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 08, 2025 02:27 AM
சென்னை: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், ௧0 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 24 மாவட்ட தலைநகரங்களில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது:
தற்போது சத்துணவு திட்டத்தின் கீழ் பணியாற்றுவோர் எண்ணிக்கை, காலியிடங்களுக்கு இணையாக குறைந்துள்ளது. அதாவது, மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை, 1.20 லட்சம் என்றால், காலியிடங்களின் எண்ணிக்கை, 63,000க்கு மேல் உள்ளது. இதனால், சில ஆண்டுகளாக, ஒவ்வொரு அமைப்பாளரும் பல்வேறு மையங்களை கவனித்து வருகின்றனர். ஆனாலும், ஒரு மையத்திற்கான ஊதியம் மட்டுமே அரசால் வழங்கப்படுகிறது.
இது ஊழியர்கள் இடையே, கூடுதல் பணிச்சுமை மற்றும் மன சோர்வை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இனி வரும் நாட்களில், கூடுதல் மையங்களை கவனிக்கும் அமைப்பாளர்களுக்கு, தலா ஒரு மையத்திற்கு, 2,000 ரூபாய் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும்.
அரசு சார்பில் தற்போது, சத்துணவு மையங்களின் செயல்பாடுகளை, இணைய வழியில் கண்காணிக்க, மையங்களுக்கு, 'ஸ்மார்ட் போன்' வழங்காமல், 'சிம் கார்டு' மட்டும் வழங்கி வருகின்றனர். இதை அதிகாரிகள் உடனடியாக கைவிட வேண்டும். சத்துணவு மையங்களில் பணியாற்றும், ஆண் அமைப்பாளர்களுக்கு, கருணை நியமன முறையில், சமூக நலத்துறையில் பதிவுறு எழுத்தர் பணி வழங்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பணி செய்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, பணிக்கொடையாக, அமைப்பாளருக்கு 5 லட்சம் ரூபாய்; சமையல் உதவியாளருக்கு 3 லட்சம் ரூபாய் அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

