எதிர்க்கட்சி தலைவர் வைத்த 10 கோரிக்கைகளில் 4 ஏற்கப்பட்டு 3 அரசால் நிறைவேற்றம்: உதயநிதி
எதிர்க்கட்சி தலைவர் வைத்த 10 கோரிக்கைகளில் 4 ஏற்கப்பட்டு 3 அரசால் நிறைவேற்றம்: உதயநிதி
ADDED : ஏப் 02, 2025 02:20 AM
'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, துணை முதல்வர் உதயநிதி அளித்த விளக்கம்:
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத அவசிய தேவைகளை, அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.,க்களின் பரிந்துரைகளின்படி நிறைவேற்ற, இத்திட்டத்தை முதல்வர் அறிவித்திருந்தார். இதுகுறித்து, 10 கோரிக்கைகளை அனுப்பி வைக்கும்படி, முதல்வர் கேட்டுக்கொண்டார்.
மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக, 2,437 பணிகளுக்கு முன்மொழிவுகள் வந்தன. துறை வாரியாக உரிய நடவடிக்கைக்கு அனுப்பபட்டு, அவை பரிசீலிக்கப்பட்டன. செயல்படுத்தக்கூடிய பணிகள், தலைமை செயலர் தலைமையிலான குழுவால் தேர்வு செய்யப்பட்டன.
அதன்படி, 2023 - 24ம் ஆண்டு 784 பணிகள், 11,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டன; இதுவரை 367 பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல, 2024 - 25ம் ஆண்டு 469 பணிகள் 3,503 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இதுவரை 65 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.
மொத்தமாக இரண்டு ஆண்டுகளில், 1,253 பணிகள், 14,503 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதல்வரால், 1,000 கோடி ரூபாயில் அறிவிக்கப்பட்ட திட்டம், 14,000 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டது போல, சில எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரைத்த பணிகளை செயல்படுத்த இயலாத நிலையில், அதற்கு பதிலாக மாற்று பணிகள் கோரப்பட்டன. அவற்றிலும் சில பணிகள் செயல்படுத்த இயலாதவை என்று தெரியவந்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவரின் எடப்பாடி தொகுதியை பொறுத்தவரை, 10 கோரிக்கைகள் அவரிடம் பெறப்பட்டன. அதில், நான்கு பணிகள் செயல்படுத்துவதற்கு எடுத்து கொள்ளப்பட்டு, மூன்று பணிகள் முடிந்துள்ளன; ஒரு பணி நடந்து வருகிறது. ஒரு பணி, பரிசீலனையில் உள்ளது. மற்ற ஐந்து பணிகள் சாத்தியமில்லை என கண்டறியப்பட்டு உள்ளன.
அதற்கு பதிலாக மாற்று பணிகளை குறிப்பிட்டு வழங்கும்படி, மாவட்ட கலெக்டர் வாயிலாக கேட்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு உதயநிதி கூறினார்.