சி.என்.ஜி., வாகன எண்ணிக்கை அதிகரிப்பு வீடுகளுக்கு 'பைப்லைனில்' வழங்க சலுகை
சி.என்.ஜி., வாகன எண்ணிக்கை அதிகரிப்பு வீடுகளுக்கு 'பைப்லைனில்' வழங்க சலுகை
UPDATED : பிப் 18, 2024 04:26 AM
ADDED : பிப் 18, 2024 04:24 AM

சென்னை: சென்னை மற்றும் புறநகரில், சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை, 35,210 ஆக அதிகரித்துள்ளது. அதில் குறிப்பாக, கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், 2,863 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், வீடுகளுக்கு, 'பைப்லைன்' எனப்படும் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்வதற்கான முன்பதிவுக்கு, பல்வேறு சலுகைகளை எரிவாயு வினியோக நிறுவனங்கள் அறிவித்துஉள்ளன.
ஊக்குவிப்பு
மத்திய அரசு, சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் காஸ் சிலிண்டருக்கு பதில், இயற்கை எரிவாயு பயன்படுத்துவதை ஊக்குவித்து வருகிறது.
குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில், குழாய் வழித்தடத்தில் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது.
அனுமதி
சென்னை எண்ணுாரில், இந்தியன் ஆயில் நிறுவனமானது, எல்.என்.ஜி., எனப்படும், 'லிக்கியூபைடு நேச்சுரல் காஸ்' எனப்படும் திரவநிலை இயற்கை எரிவாயு முனையம் அமைத்துள்ளது. இதற்கு, வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் திரவநிலை எரிவாயு எடுத்து வரப்படுகிறது.
தமிழகத்தில், 1.61 கோடி வீடுகளுக்கு குழாய் வழித்தடத்திலும்; 2,865 சி.என்.ஜி., நிலையங்கள் வாயிலாக வாகனங்களுக்கும் இயற்கை எரிவாயு வினியோகிக்க எட்டு நிறுவனங்களுக்கு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் அனுமதி அளித்துள்ளது.
அந்நிறுவனங்கள் மாநிலம் முழுதும், 27,563 கிலோ மீட்டருக்கு குழாய் வழித்தடம் அமைக்கப்பட வேண்டும்.
![]() |
சென்னையில், 'டோ ரண்ட்' காஸ் நிறுவனத்தின், 25 சி.என்.ஜி., நிலையங்கள் வாயிலாக எரிவாயு விற்பனையை, 2021 ஆகஸ்டில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அப்போது, சென்னையில் சி.என்.ஜி.,யில் இயங்கும் ஆட்டோக்கள் எண்ணிக்கை, 10.
பெட்ரோல், டீசலுடன் ஒப்பிடும் போது, சி.என்.ஜி., விலை குறைவாக உள்ளது. மேலும், கூடுதல், 'மைலேஜ்' தருவதுடன், சுற்றுச்சூழலையும் பாதிப்பதில்லை.
இதனால், வாகன ஓட்டிகள், சி.என்.ஜி.,யில் இயங்கும் வாகனங்களை வாங்கி வருகின்றனர். மற்ற மாவட்டங்களில் சி.என்.ஜி., நிலையம் அமைக்கும் பணி தற்போது தான் துவங்கியுள்ளது.
17,500 வீடுகள்
அம்மாவட்டங்களில், 5 - 10 சி.என்.ஜி., நிலையங்கள் உள்ள நிலையில், சென்னையில், 67 நிலையங்கள் உள்ளன. சென்னை மற்றும் புறநகரில் தான், சி.என்.ஜி.,யில் இயங்கும் வாகனம் வாங்குவோர் அதிகரித்து வருகின்றனர்.
இதேபோல் வீடுகளுக்கும் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது, தமிழகம் முழுதும், 17,500 வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, வீட்டு வாடிக்கையாளரை கவரும் வகையில் முன்பதிவு செய்ய பல்வேறு சலுகைகளை, காஸ் வினியோக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.