போதை பொருள் கடத்தலில் மாவோயிஸ்ட், புலிகள் தொடர்பு சர்வதேச நெட்ஒர்க் பற்றி அதிகாரி பேட்டி
போதை பொருள் கடத்தலில் மாவோயிஸ்ட், புலிகள் தொடர்பு சர்வதேச நெட்ஒர்க் பற்றி அதிகாரி பேட்டி
ADDED : ஜன 05, 2024 10:36 PM

சென்னை:''போதை பொருள் கடத்தல் தொடர்பாக, ஓராண்டில், 76 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்,'' என, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல்களின், 'நெட் ஒர்க்' குறித்து துப்பு துலக்கி கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். இவர்களுடன் மாவோயிஸ்ட் மற்றும் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களின் தொடர்பும் அதிகமாக உள்ளது.
ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில், பாடேறு அருகே, ஜின்னகருவு என்ற மலை கிராமம் உள்ளது. அங்கு மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகம். எளிதாக வெளி நபர்கள் அந்த கிராமத்திற்குள் காலடி எடுத்து வைத்துவிட முடியாது.
அங்கு, சுந்தரராவ், 39, என்ற மாவோயிஸ்ட் கஞ்சா மொத்த வியாபாரியாக செயல்படுகிறார். வீட்டில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பதுக்கி வைத்துள்ளார் என்ற தகவல் கிடைத்தது. சவாலுடன் அந்த கிராமத்திற்குள் புகுந்து, சுந்தரராவை கைது செய்தோம்.
அவர் வீட்டில் இருந்து, 17 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,760 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தோம். இதற்கு ஆந்திர மாநில போலீசார் மிகுந்த ஒத்துழைப்பு அளித்தனர்.
அந்த கைதுக்கு பின், மலை கிராம மக்களிடம் மாவோயிஸ்ட் தொடர்பான பிம்பம் உடைபட்டது. தமிழகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, கஞ்சா, எபிட்ரின், கோகைன், மெத்தாபெட்டமைன் என்ற போதை பொருட்கள் அதிகமாக கடத்தப்படுவது தெரியவந்துள்ளது.
போதை பொருள் கடத்தல் தொடர்பாக, 2023ல் 76 பேரை கைது செய்துள் ளோம். இவர்களில் 14 பேர், நைஜீரியா, இலங்கை, உகாண்டா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.