UPDATED : மார் 09, 2024 02:24 AM
ADDED : மார் 09, 2024 01:58 AM

சென்னை: பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயற்சி மையத்தில், 11 மாத பயிற்சியை நிறைவு செய்தவர்கள், நேற்று பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.
சென்னை பரங்கிமலையில், ஓ.டி.ஏ., எனப்படும், ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம், 1963ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், யு.பி.எஸ்.சி., எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ராணுவ அகாடமியில் நான்கு நாட்கள் நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில், வெற்றி பெறுவோருக்கு, இந்த ஓ.டி.ஏ.,வில், 11 மாதம் பலவிதமான பயிற்சிகள் அளிக்கப்படும்.
அதன்படி, கடந்த, 11 மாதமாக பயற்சி பெற்ற ராணுவ அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்தனர். ஆண்டுதோறும் பயிற்சி நிறைவு விழாவிற்கு முன்தினம், சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல நேற்றும், பயிற்சி பெற்றவர்கள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.
முதலில், எஸ்.எஸ்.சி.,யின் தேர்ச்சி அணிவகுப்பு நடந்தது. பின், உடற்பயிற்சி நிகழ்ச்சியும், ராணுவ இசைக் குழுவினரின் நிகழ்ச்சியும் நடந்தது.
அடுத்ததாக, கேரளாவின் புகழ்பெற்ற தற்காப்பு கலையான களறிப்பயட்டு பயிற்சியிலும் வீரர்கள் அசத்தினர்.
தொடர்ந்து, இருசக்கர வாகன சாகசம், மனித கோபுரம் அமைத்தல், குதிரை வீரர்கள் சாகசம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் இளம் வீரர்கள் நிகழ்த்தினர். மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் வீராங்கனைகளின் சாகச நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
இந்நிகழ்ச்சியில், பயிற்சி மையத்தின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் சஞ்சீவ் சவுகான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பயிற்சி அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.