ADDED : ஜன 30, 2024 10:25 PM

சென்னை:சென்னை நுங்கம்பாக்கத்தில், மத்திய அரசின் வருவாய் மற்றும் நிதியமைச்சகத்தின் கீழ், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான, ஜி.எஸ்.டி., மற்றும் கலால் வரி முதன்மை தலைமை கமிஷனர் அலுவலகம் செயல்படுகிறது.
அங்கு, துணை கமிஷனராக பாலமுருகன், 60, பணிபுரிகிறார். இவர், மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில், சேலத்தை சேர்ந்த இரண்டு விவசாயிகளுக்கு, 'விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, அமலாக்கத்துறை அதிகாரிகள் 'சம்மன்' அனுப்பினர். அதில், ஜாதி பெயர் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு பாலமுருகன் கண்டனம் தெரிவித்தார். மேலும், அமலாக்கத்துறை, மத்திய அரசின் நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படுவதால், அந்த துறையின் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என, அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.
நிர்மலா சீதாராமனின் பதவி பறிக்க வேண்டும் என, ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதினார். ஏற்கனவே, 2009ல், இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில், விடுதலை புலிகள் அமைப்பினருக்கு ஆதரவாகவும், அங்கு தமிழர்கள் தாக்குப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால், பல முறை துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளார். விளக்க அறிக்கையும் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலமுருகன் இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
பாலமுருகன் வெளியிட்டுள்ள, 'வீடியோ'வில், 'என்னை கைது செய்து சிறையில் அடைக்க சதி நடக்கிறது' என, குற்றம் சாட்டியுள்ளார்.