அதிகாரிகள் நேர்மையாக இல்லை; ஆட்சியாளர்கள் சரியாக இல்லை: கிருஷ்ணசாமி
அதிகாரிகள் நேர்மையாக இல்லை; ஆட்சியாளர்கள் சரியாக இல்லை: கிருஷ்ணசாமி
ADDED : ஆக 11, 2025 03:53 AM

திருநெல்வேலி: உளவுப்பிரிவில் முக்கிய ஜாதியினர் இருப்பதாகவும், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தி உள்ளது.
திருநெல்வேலியில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது:
திருநெல்வேலியில் ஜூலை 27ல், இளைஞர் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்டதற்கு, அ.தி.மு.க., கண்டனம் தெரிவிக்கவில்லை. பா.ஜ.,வினரும் கவின் வீட்டுக்கு சென்றனரே தவிர, வெளிப்படையாக கண்டிக்க தயங்குகின்றனர்.
இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் அரசு தடுத்திருக்க வேண்டும்.
இந்த கொலையை ஆதரித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, கொலை குற்றத்தில் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும். இது தொடர்பாக, பதிவிட்ட யு டியூபர்கள் மீது மிரட்டல் வருகிறது.
நடிகை கஸ்துாரியை மிரட்டுகின்றனர். சமூக நீதி பற்றி பேசும் தி.மு.க., அரசு களத்திற்கு வரும்போது ஒதுங்கிக் கொள்கிறது.
தென் தமிழகத்தில் காவல் துறை ஒருதலைப்பட்சமாக ஜாதி பார்த்து செயல்படுகிறது. போலீஸ் உளவுப்பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளில், முக்கிய ஜாதியினர் உள்ளனர். அவர்களில் சிலரை உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்.
அதிகாரிகள் நேர்மையாக இல்லை. ஆட்சியாளர்கள் சரியாக இல்லை. கவின் படுகொலையை கண்டித்து, ஆக., 17ல் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.