பந்தாடப்படும் அதிகாரிகள்: முதல்வர் விளக்கம் தர கோரிக்கை
பந்தாடப்படும் அதிகாரிகள்: முதல்வர் விளக்கம் தர கோரிக்கை
ADDED : ஜூலை 17, 2025 11:17 PM
சென்னை:'நெல் கொள்முதலில் முறைகேடு செய்த நிறுவனங்களை பாதுகாக்க, நேர்மையான அதிகாரிகள் பந்தாடப்படுகின்றனர். இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்' என, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர், பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு வாயிலாக நெல் கொள்முதல் செய்ய, தனியார் நிறுவனத்திற்கு நடப்பாண்டு அனுமதி வழங்கப்பட்டது. இதனால், விவசாயிகள் மிகப்பெரும் அவதிக்கு ஆளாகினர்.
நெல் கொள்முதலில் முறைகேடு செய்த நிறுவனங்களை பாதுகாக்க, நேர்மையான அதிகாரிகள் பந்தாடப்படுகின்றனர். இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால், நீர்நிலைகளையும், விளைநிலங்களையும், விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் அபகரிப்பதற்கு, 'தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் - 2023' நிறைவேற்றப்பட்டு உள்ளது.
நாட்டில் எந்த மாநிலத்திலும் கொண்டுவரப்படாத மிக மோசமான சட்டம், தமிழகத்தில் அமலில் உள்ளது. இதன் வாயிலாக, ஏரிகளையும், இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
டெல்டா அல்லாத மாவட்டங்களில், விவசாயிகளுக்கு நெல் சாகுபடி நடவு மானியமாக, ஏக்கருக்கு 4,000 ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், இதுவரை விவசாயிகளுக்கு அந்த நிதி கிடைக்கவில்லை. தமிழக அரசில் ஊழல் முறைகேடு தீவிரமடைந்துள்ளது. இதனால், மக்களின் நம்பிக்கையை அரசு இழந்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

