ADDED : செப் 11, 2025 11:51 PM
சென்னை:'கன்னியாகுமரி மாவட்டத்தில், மீன்வளத்துறை துணை இயக்குநர் பதவி, மூன்று மாதமாக காலியாக உள்ளது. இங்குள்ள பிரச்னையை சமாளிக்க முடியாது என, இப்பதவிக்கு வர அதிகாரிகள் தயங்குகின்றனர். சரியான அதிகாரியை, மீன்வளத்துறை பணியமர்த்த வேண்டும்' என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில், மீன்வள துணை இயக்குநர் பதவி, கடந்த மூன்று மாதங்களாக காலியாக உள்ளது. தற்போது பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர், மூன்று நாட்கள் மட்டும், கன்னியாகுமரியில் தங்குகிறார். பணிகளை சரியாக கவனிக்க முடிவதில்லை. இம்மாவட்டத்தில் மீனவர்கள் பிரச்னை அதிகம்.
இதன் காரணமாக, இங்கு பணிக்கு வர, அதிகாரிகள் யாரும் தயாராக இல்லை. இது மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இம்மாவட்ட மீனவர்களின் மனநிலையை புரிந்து பணியாற்றக்கூடிய நல்ல அதிகாரியை, இம்மாவட்ட துணை இயக்குநராக, விரைவில் நியமிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.