வட்டி தள்ளுபடி திட்டத்தில் அதிகாரிகள் குளறுபடி: வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் அதிருப்தி
வட்டி தள்ளுபடி திட்டத்தில் அதிகாரிகள் குளறுபடி: வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் அதிருப்தி
ADDED : ஆக 18, 2025 01:14 AM

சென்னை: வீட்டு வசதி வாரியத்தின் வட்டி தள்ளுபடி திட்டத்தை, எந்த தேதியில் இருந்து கணக்கிடுவது என்பதில் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதாக, ஒதுக்கீட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், வீட்டுவசதி வாரியம் சார்பில் குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் வீடு ஒதுக்கீடு பெற்றோர், மாத தவணைகளை முறையாக செலுத்தினால், அவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்படும்.
முடங்கும் நிலை மாத தவணைகளை முறையாக செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்போர், விற்பனை பத்திரம் பெற முடியாது. இதனால், வாரியத்தின் நிதி முடங்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, தவணை வைத்துள்ளோர் நிலுவைத் தொகையை செலுத்த, வட்டி, அபராத வட்டி தள்ளுபடி திட்டம் செயல் படுத்தப்படுகிறது. 2026 மார்ச் 31 வரை அமலாகும் வகையில், வட்டி, அபராத வட்டி தள்ளுபடி திட்டத்தை, வீட்டுவசதி வாரியம் கடந்த மாதம் அறிவித்தது.
இதில், வட்டி தள்ளுபடிக்கான கணக்கீட்டில், வாரிய அதிகாரிகள் தன்னிச்சையாக, சில மாற்றங்களை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக வீட்டுவசதி வாரிய ஒருங்கிணைந்த ஒதுக்கீட்டாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலர் கே.ஜெயசந்திரன் கூறியதாவது:
தமிழகத்தில் வீட்டு வசதி வாரிய திட்டங்களில், மனை வாங்கிய போது, அதற்கான இறுதி விலை நிர்ணயிக்கப்படவில்லை. நிலத்தின் பழைய உரிமையாளர்கள், தாங்கள் வழங்கிய நிலத்திற்கு கூடுதல் தொகை கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளின் தீர்ப்பு அடிப்படையில், இறுதி விலை நிர்ணயிக்கப்பட்ட போது, அதற்கான கூடுதல் தொகையை வட்டியுடன் வசூலிக்க வாரியம் முடிவு செய்தது. இதனால், மனை வாங்கியோருக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை கருத்தில் வைத்து, இறுதி விலை வித்தியாச தொகைக்கான வட்டியில், ஒவ்வொரு ஆண்டிலும், ஐந்து மாத தொகையை அரசு ஏற்பது, ஏழு மாத தொகையை ஒதுக்கீட்டாளர் ஏற்பது என்று முடிவானது.
இதன்படி, நிலம் கையகப்படுத்தப்பட்ட நாள் முதல், இந்த பங்கீட்டை கணக்கிடுவது என முடிவு செய்து, அதற்கான அரசாணை, 2011ல் பிறப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே, அடுத்தடுத்த ஆண்டுகளில் தள்ளுபடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
இறுதி விலை தற்போது, வட்டி தள்ளுபடி திட்டத்துக்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், இறுதி விலை நிர்ணயிக்கப்பட்ட நாளில் இருந்து மட்டும், வட்டி தள்ளுபடி திட்டம் அமலாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், நிலம் கையகப்படுத்தப்பட்ட நாள் முதல் இறுதி விலை நிர்ணயிக்கப்பட்ட நாள் வரை, வட்டி தொகையை ஒதுக்கீட்டாளர்கள் முழுமையாக செலுத்த வேண்டிஉள்ளது.
அரசு ஏற்கனவே எடுத்த முடிவுக்கு மாறாக, வாரிய அதிகாரிகள் தற்போது நடந்து வருகின்றனர். இதனால், அரசு நல்ல நோக்கத்தில் அறிவித்த திட்டம் பாழாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதில், உரிய திருத்தங்கள் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஒதுக்கீட்டாளர்கள் சார்பில், முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

