பயிர்கள் பாதிப்பு நிலவரம் கண்காணிக்கும் அதிகாரிகள்
பயிர்கள் பாதிப்பு நிலவரம் கண்காணிக்கும் அதிகாரிகள்
ADDED : நவ 29, 2024 01:30 AM
சென்னை:'வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள, பயிர் பாதிப்பு நிலவரங்களை, மாவட்ட வேளாண் இணை இயக்குநர்கள் கண்காணித்து வருகின்றனர்' என, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
வடகிழக்கு பருவமழை, அக்., 1 முதல் துவங்குவது வழக்கம். நடப்பாண்டு, அக்., 16ல் துவங்கியது. அனைத்து மாவட்டங்களிலும், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், 31,853 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வேளாண் உதவி இயக்குநர்கள், வேளாண் அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் உள்ளிட்ட 5,908 பேர், களப்பணியில் உள்ளனர்.
வயல்களில் தேங்கியுள்ள நீரை வடிப்பது, அதன் பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். பருவமழை டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வப்போது ஏற்படும் பயிர் பாதிப்பு நிலவரங்களை, மாவட்ட வேளாண் இணை இயக்குநர்கள் கண்காணித்து வருகின்றனர். அவர்கள், வருவாய் துறையுடன் இணைந்து, 33 சதவீத்திற்கு மேல் பயிர் பாதிப்பை கணக்கீடு செய்த பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

