சாலை புனரமைப்பு நிதி தாமதம் கோர்ட்டுக்கு அலையும் அதிகாரிகள்
சாலை புனரமைப்பு நிதி தாமதம் கோர்ட்டுக்கு அலையும் அதிகாரிகள்
ADDED : ஜன 18, 2024 01:21 AM
சென்னை:தேசிய நெடுஞ்சாலைகள் புனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு தாமதமாவதால், இது தொடர்பான வழக்குகளுக்காக, நீதிமன்றங்களில், ஆணைய அதிகாரிகள் ஆஜராகி வருகின்றனர்.
தமிழகத்தில், 6,606 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இதில், 5,095 கி.மீ., சாலைகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரித்து வருகிறது. மீதமுள்ள 1,511 கி.மீ., சாலைகள், மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகிறது.
கட்டணம்
இதற்கான நிதியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது. சரக்கு வாகன போக்குவரத்து மட்டுமின்றி, பயணியர் போக்குவரத்துக்கும், இச்சாலைகள் உதவிகரமாக உள்ளன.
தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம், கட்டணம் வசூலிப்பதற்காக, 58 இடங்களில், சுங்கச்சாவடிகள் உள்ளன.
இதன் வாயிலாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, மாதந்தோறும், 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால், இரண்டு ஆண்டுகளாக, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்புக்கு, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நிதி வழங்கவில்லை.
குறிப்பாக, பயணியர் போக்குவரத்து மிகுந்த சென்னை - திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, சென்னை - பெங்களூரு, சென்னை - கோல்கட்டா, சென்னை - திருப்பதி, திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலைகளின், ஆண்டு புனரமைப்பு பணிக்கு, நிதி கிடைக்கவில்லை.
பல சாலைகள், குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், அவற்றில், விபத்துகள் அதிகரித்து வருகின்றன. சாலை விபத்துகள் அதிகளவில் நடக்கும் மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
மோசமடைந்த சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது, சாலைகளை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி, நீதிமன்றங்களில், பொதுநல வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது.
நெருக்கடி
இந்த வழக்குகளில் ஆஜராவதற்கும், அதற்கான ஆவணங்களை தயார் செய்வதற்கும், அதிக நேரத்தை செலவிட வேண்டிய நெருக்கடியில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் உள்ளனர். நீதிமன்ற கண்டனத்திற்கும், ஆணைய அதிகாரிகள் ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய தமிழகப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டடுக்கு மேம்பாலச்சாலை, கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பணிகளுக்கு, கோடிக்கணக்கான ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதனால், ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் புனரமைப்புக்கு போதிய நிதி வழங்கவில்லை.
இதுகுறித்து, டில்லியில் உள்ள அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசியதன் விளைவாக இப்போது, சில பணிகளுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியில், சாலைகள் புனரமைப்பு பணி நடக்கிறது. பருவமழை முடிந்த நிலையில், விரைவில், சாலைகள் முழுவதும் சீராகும்.
இவ்வாறு அவர் கூறினார்.