'தரமற்ற சாலை வேய்ந்த அதிகாரிகள் கான்ட்ராக்டர்களிடம் நிதி இழப்பை வசூலிக்க வேண்டும்'
'தரமற்ற சாலை வேய்ந்த அதிகாரிகள் கான்ட்ராக்டர்களிடம் நிதி இழப்பை வசூலிக்க வேண்டும்'
ADDED : ஜூலை 11, 2025 02:18 AM
மதுரை:'அரசு நிர்ணயித்துள்ள தரத்தில் சாலைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கவனக்குறைவு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை அவர்களிடம் வசூலிக்க வேண்டும். இது குறித்த வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம், ஆனந்தபுரம் ராகவன் தாக்கல் செய்த பொதுநல மனு:
மானுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மதவக்குறிச்சி முதல் உகந்தான்பட்டி இடையே 2018ல் நபார்டு சாலை திட்டத்தின் கீழ், 79 லட்சத்து, 61,245 ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டது.
சாலை இரண்டு மாதங்களில் சேதமடைந்தது. அரசின் பொது நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. விபத்துகள் ஏற்படுகின்றன.
சாலை அமைக்கும் பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க தவறினர்.
கலெக்டருக்கு புகார் அனுப்பினேன்.தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையை சீரமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் ஆஜரானார்.அரசு வழக்கறிஞர் மகாராஜன், 'அச்சாலை முன்பு ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின், மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 2023 - 24ல் மீண்டும் புதிதாக சாலை அமைக்கப்பட்டது' என்றார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மாநில அரசு நிர்ணயித்துள்ள தரம், விதிகள்படி சாலைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதை கண்காணித்து, கள ஆய்வு செய்வதில் கவனக்குறைவு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களை பொறுப்பேற்க செய்ய வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் கூட்டு சேர்ந்து அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தினால், அவர்களிடம் தொகையை வசூலிக்க வேண்டும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை கீழ்நிலை அதிகாரிகளுக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை செயலர் வெளியிட வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.