பழைய ஓய்வூதியத் திட்டம் விரைவில் செயல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
பழைய ஓய்வூதியத் திட்டம் விரைவில் செயல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
ADDED : ஆக 11, 2025 04:03 PM

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட ககன்தீப் சிங் பேடி குழு வரும் 18ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பிப்ரவரி 4ம் தேதி அமைக்கப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாக உறங்கிக் கொண்டிருந்த குழு, இப்போதாவது விழித்துக் கொண்டு பணி செய்ய தொடங்கவிருப்பது மனநிறைவளிக்கிறது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது.
அரசுத் தரப்பில் நடத்தப்பட வேண்டிய கலந்தாய்வுப் பணிகளையும் முடித்து செப்டம்பர் மாத மத்திக்குள் ககன்தீப் சிங் பேடி குழு அதன் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் செப்டம்பர் மாத இறுதிக்குள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.