திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி ரூ.50 கோடியில் பணி துவக்கம்
திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி ரூ.50 கோடியில் பணி துவக்கம்
ADDED : ஜன 24, 2025 12:37 AM

திருச்சி:தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு அதிக வீரர்களை அனுப்பும் நோக்கில், திருச்சி அருகே, 50 கோடி ரூபாய் செலவில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கும் பணியை, அமைச்சர்கள் நேரு, மகேஷ் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள எலந்தப்பட்டி கிராமத்தில், 47.87 ஏக்கரில், 50 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து விளையாட்டுகளுக்கான ஒலிம்பிக் அகாடமி அமைக்கும் பணியை, தமிழக அமைச்சர்கள் நேரு, மகேஷ் நேற்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.
இந்தப் பணி, 18 மாதங்களில் முடியும் என்று கூறப்படுகிறது.  ஒலிம்பிக் அகாடமியில், சர்வதேச தரத்திலான கால்பந்து மைதானம், ஓடுதளம், ஜிம்னாஸ்டிக்ஸ் மைதானங்கள் அமைக்கப்படுகின்றன.
பில்லியர்ட்ஸ், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை, வாள்வீச்சு, மல்யுத்தம், டேக்வாண்டோவுக்கான பயிற்சி மையங்களும் அமைக்கப்படவுள்ளன. திருச்சி அருகே அமையும் ஒலிம்பிக் அகாடமி, அடுத்தகட்டமாக, 100 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும் என, அமைச்சர் நேரு தெரிவித்தார்.

