ADDED : பிப் 01, 2026 02:01 AM

சென்னை: 'சுதந்திர போராட்ட வீரர் ஓமந்துார் ராமசாமி ரெட்டியாருக்கு, சென்னை ஓமந்துாரார் அரசினர் மருத்துவ கல்வி வளாகத்தில் சிலை அமைக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அரசு செய்திக்குறிப்பு:
தமிழகத்தின் தலைசிறந்த அரசியல் தலைவர் களில் ஒருவராக போற்றப்படும் ஓமந்துார் ராமசாமி ரெட்டியார், விடுதலை போராட்ட வீரராக தன் அரசியல் வாழ்வை துவக்கி, காந்திய கொள்கையை துளியும் சிதையாமல் பின்பற்றுபவராக இருந்தார்.
முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின், மிக மிக சாதாரண விவசாயியை போல், தன் வாழ்க்கையை வடிவமைத்து கொண்டவர் ஓமந்துாரார். நாடு விடுதலை அடையும்போது, சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த ஓமந்துாரார், ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியா உடன் இணைத்த நடவடிக்கைக்கு ஒரு காரணமாகவும் திகழ்ந்தார்.
அவரது சிலை, சென்னை ஓமந்துாரரார் அரசினர் மருத்துவ கல்வி வளாகத்தில் அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

