போர்க்கால அடிப்படையில், மறுசீரமைப்பு பணி; தமிழக அரசு
போர்க்கால அடிப்படையில், மறுசீரமைப்பு பணி; தமிழக அரசு
ADDED : டிச 04, 2024 01:52 PM

சென்னை: 'புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் போர்க்கால அடிப்படையில் நிவாரண மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடக்கிறது' என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பெஞ்சால் புயலால், மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் போர்க்கால அடிப்படையில் நிவாரண மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடக்கிறது. விழுப்புரத்தில் முகாம்களில் தங்கியிருந்த 16,616 பேருக்கு 1.58 லட்சம் உணவு பொட்டலங்கள், 4,000 லிட்டர் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளன.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் நிவாரண முகாம்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளவர்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் உடனடியாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி மக்களுக்கு இருப்பிடம், உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அமைச்சர்கள் தலைமையில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.