
செப்., 23, 1964
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில், பொன்னுசாமி - பாவாத்தா தம்பதியின் மகனாக, 1964ல் இதே நாளில் பிறந்தவர் பொன்வண்ணன்.
இவர், மொடக்குறிச்சியில் பள்ளிப்படிப்பையும், சென்னையில் ஓவிய ஆசிரியர் பயிற்சியையும் முடித்தார். 'விகடகவி' என்ற ஓவிய, கையெழுத்து பத்திரிகையை நடத்தினார். 'ஆர்ட் லேண்ட்' சினிமா பேனர் கம்பெனியில் ஓவியராகவும், 'மதர் லேண்ட் பிக்சர்ஸ்' சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாகியாகவும் பணியாற்றினார். சினிமா காட்சி களை, 'ஸ்டோரி போர்ட்'டாக வரையும் வல்லமை பெற்ற இவர், ராஜன் இயக்கிய, சோலைக்குயில் படத்தில் உதவி இயக்குனரானார். தொடர்ந்து, பாரதிராஜாவிடம், என் உயிர் தோழன் படத்தில் உதவியாளரானார்.
புதுநெல்லு புதுநாத்து படத்தில் நடிகராகவும், வசனகர்த்தாவாகவும் உயர்ந்தார். தொடர்ந்து, கருத்தம்மா, பசும்பொன், பருத்தி வீரன், அஞ்சாதே, மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அன்னை வயல், ஜமீலா திரைப்படங்களை இயக்கி உள்ளார். உலக வரலாற்றையும், தொல்லியல் தகவல்களையும் ஆராய்ந்து சேகரிக்கும் இவர், பழந்தமிழர் வரலாற்றை, சமகால உலக வரலாற்றுடன் ஒப்பிட்டு, ஓவிய ஆவணமாக்கி வருகிறார். 'உப்பு, புளி, காரம்' உள்ளிட்ட இணைய தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்த, ஓவிய - கலைஞனின், 59வது பிறந்த தினம் இன்று!