
டிசம்பர் 16, 1928
சென்னை, திருவல்லிக்கேணியில், வெலமா சமூகத்தை சேர்ந்த நிலச்சுவான்தார்கள் குடும்பத்தில், 1866 ஜூலை 9ல் பிறந்தவர் பனங்கன்டி ராமராயநிங்கார் எனும், பனகல் ராஜா.
இவர், சென்னை மாநில கல்லுாரியில் முதுகலை சட்டம் படித்தார். 1912ல், நில உரிமையாளர்கள் மற்றும் ஜமீன்தார்களின் பிரதிநிதியாக, அப்போதைய பார்லிமென்டிற்கு தேர்வானார். 1914ல், நடேச முதலியார் துவங்கிய, சென்னை திராவிடர் சங்கத்தில் சேர்ந்தார்.
தொடர்ந்து, டி.எம்.நாயரும், தியாகராய செட்டியாரும் துவக்கிய நீதிக்கட்சியில் சேர்ந்தார். நீதிக்கட்சியின் சார்பில் சுப்பராயலு ரெட்டியார் முதல்வரானதும், இவர், உள்ளாட்சி துறை அமைச்சரானார்.
அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது, இவர் முதல்வரானார். ஆந்திர பல்கலை, அண்ணாமலை பல்கலை, ஹிந்து சமய அறநிலையத்துறை, வகுப்புவாரி இட ஒதுக்கீடு, பள்ளிகளில் மதிய உணவு திட்டம் உள்ளிட்டவற்றை உருவாக்கினார். மருத்துவ படிப்புக்கு சமஸ்கிருதம் தேவையில்லை எனும் சீர்திருத்தத்தையும் செய்தார்.
'பனகல் ராஜா' என, பிரிட்டிஷ் அரசால் பட்டம் சூட்டப்பட்ட இவர், தன், 62வது வயதில், 1928ல் இதே நாளில் மறைந்தார்.
சென்னையின் வளர்ச்சிக்காக பாடுபட்ட, 'பனகல்' ராஜாவின் நினைவு தினம் இன்று!

