
ஜனவரி 9, 1922
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம், முல்தானில், கண்பத்ராய் குரானா - கிருஷ்ணா தேவி தம்பதியின் மகனாக, 1922ல் இதே நாளில் பிறந்தவர் ஹர் கோபிந்த் குரானா.
இவர், லாகூர் அரசு கல்லுாரி, பஞ்சாப் பல்கலைகளில் வேதியியல் படித்தார். அரசு உதவித் தொகையுடன் பிரிட்டனின் லிவர்பூல் பல்கலையில், டாக்டர் பட்டம் பெற்றார். சுவிட்சர்லாந்து பெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆய்வு செய்தார். அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலையில், நொதிகளை ஆய்வு செய்தார்.
மனித உடற்செயலியலுக்கு அவசியமான, 'கோ என்சைம் ஏ'யை உற்பத்தி செய்தார். மரபு வழி நோயை கட்டுப்படுத்தும் முறையைக் கண்டறிந்தார். இந்த ஆய்வுக்காக, நோரென்பர்க், ஹாலியுடன் இணைந்து நோபல் பரிசு பெற்றார்.
அமெரிக்க தேசிய அறிவியல் பதக்கம், ஐ.சி.போஸ் பதக்கம், நம் நாட்டின் பத்மபூஷண் உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றவர், 2011, நவம்பர் 9ல் தன் 89வது வயதில் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!