
ஜனவரி 18, 1933
'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் - கிருஷ்ணம்மாள் தம்பதியின் மகனாக, கன்னியாகுமரி மாவட்டம், வடிவீஸ்வரத்தில், 1933ல் இதே நாளில் பிறந்தவர் இரா.கிருஷ்ணமூர்த்தி.
நாகர்கோவில் எஸ்.எல்.பி., பள்ளி, ஸ்காட் கிறிஸ்துவ கல்லுாரி, காரைக்குடி, சென்னை பல்கலைகளில் படித்தார். பின், 'தினமலர்' நாளிதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று, சமூக பொறுப்புடன் செய்திகளை வெளியிட்டார். ஈ.வெ.ரா.,வின் எழுத்து சீர்திருத்தத்தை ஏற்று, திருச்சி பதிப்பில் வெளியிட்டார்.
கணினி அச்சுக்காக விசை பலகையையும், எழுத்துக்களையும் வடிவமைத்தார். சங்ககால நாணயங்களை ஆய்வு செய்தவர், 'பெருவழுதி' நாணய கண்டுபிடிப்பு பற்றி, பனாரஸ் மாநாட்டில் பேசினார். அதில், 'ழு' என்ற எழுத்தை விளக்கி, தமிழர்கள் சங்க காலத்தில் எழுத்தை அறிந்தவர்கள் என நிரூபித்தார்.
தொடர்ந்து, மூவேந்தர்கள், கிரேக்க, ரோம நாணயங்கள் மற்றும் வட்டெழுத்துக்களை ஆராய்ந்து கட்டுரைகள் எழுதினார். தமிழ் செம்மொழி அந்தஸ்துக்கு, நாணய ஆதாரங்களை வழங்கினார். 'தொல்காப்பியர்' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 2021 மார்ச் 4ல் தன் 88வது வயதில் காலமானார்.
'சங்ககால நாணயவியலின் தந்தை' பிறந்த தினம் இன்று!