
ஜனவரி 26, 1917
கோவையில், திரவியம் ஆசாரியார் - மருதாயி தம்பதியின் மகளாக, 1917ல் இதே நாளில் பிறந்தவர் சி.டி.ராஜகாந்தம்.
இவர் தன் 5வது வயதில் தந்தையை இழந்தார். இவரது 15வது வயதில், அப்புக்குட்டி என்பவருடன் திருமணம் நடந்தது. கோவையில் இருந்த இவரின் மிகப்பெரிய வீட்டில், அக்காலத்தில் நாடகக் குழுவை வைத்திருந்த எஸ்.ஆர்.ஜானகி தங்கினார்.
ஜானகி, இவரின் தாயிடம் அனுமதி பெற்று, தன் நாடகக் குழுவில் இவரை இணைத்துக் கொண்டார். 'துாக்குத்துாக்கி' என்ற நாடகத்தில், தோழி கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்தார். மாணிக்கவாசகர் திரைப்படத்தில், சிறு வேடத்தில் அறிமுகமானார்.
இவரது நடிப்பை கண்ட நடிகர் காளி என்.ரத்னம், உத்தம புத்திரன் படத்தில் நடிக்க வைத்தார்; அது வெற்றி பெற்றது. தொடர்ந்து, ஊர்வசி, சூர்யபுத்திரி, பக்த கவுரி, மாயாஜோதி, தயாளன், சபாபதி, மனோன்மணி, சதி சுகன்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில படங்களில் பாடினார். சொந்தமாக நாடக நிறுவனம் துவக்கி நடத்தினார். இவர் தன், 82வது வயதில், 1999ல் காலமானார்.
எம்.ஜி.ஆர்., கட்டிய முதல் கைக்கடிகாரத்தை பரிசளித்த நடிகை பிறந்த தினம் இன்று!

