
ஜனவரி 31, 1994
சென்னை, போரூர் அருகில் உள்ள காரம்பாக்கத்தில் கா.கிருஷ்ணய்யர் - வேங்கடசுப்பம்மாள் தம்பதிக்கு மகனாக, 1911 ஏப்ரல் 4ல் பிறந்தவர் கா.ம.வேங்கடராமையா.
சென்னை, லயோலா கல்லுாரியில் பொருளாதாரம் படித்து, செங்கல் பட்டில் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட இவர், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
தமிழ், சமஸ்கிருதம் மற்றும் பிற மொழிகள் ஆராய்ச்சி நிலையம், அண்ணாமலை பல்கலையின் திருக்குறள் இருக்கை, தஞ்சை தமிழ்ப் பல்கலையின் அரிய கையெழுத்து சுவடிப்புலம், திருவனந்தபுரம் பன்னாட்டு திராவிட மொழியியல் ஆய்வு நிறுவனங்களில் ஆய்வாளராக பணியாற்றினார்.
'குமரகுருபரர்' இதழின் நிர்வாகப் பொறுப்பாளராக இருந்தார். சைவத்திருமுறைகள், திருக்குறள் உள்ளிட்டவற்றுக்கான பன்மொழி விளக்கம் எழுதினார். இவரது பல்வேறு ஆய்வு நுால்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இவர் தன் 83வது வயதில், 1994ல் இதே நாளில் மறைந்தார்.
தமிழுக்கும், சைவத்துக்கும் தொண்டாற்றிய அறிஞர் வேங்கடராமையாவின் நினைவு தினம் இன்று!

