
பிப்ரவரி 10, 1929
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், வைத்தியர் கிருஷ்ணனின் மகனாக, 1929, இதே நாளில் பிறந்தவர் மனோகரன். இவர், மாணவ பருவத்திலேயே திராவிட இயக்க சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார்.
பின், தி.மு.க.,வில் சேர்ந்து, பேச்சாளராகி பிரபலமானார். நாஞ்சில் மாவட்டம் என அழைக்கப்படும் குமரி மாவட்டத்தில் உள்ள தென்தாமரைக்குளத்தில், 144 தடை உத்தரவை மீறி பொதுக்கூட்டம் நடத்தி கைதானார். இதனால், 'நாஞ்சில் மனோகரன்' என, கட்சியில் புகழ்பெற்றார். பிரசார குழு உறுப்பினரான இவர், 1962, 1967, 1971ம் ஆண்டு, லோக்சபா தேர்தல்களில் வென்று, சென்னையின், எம்.பி.,யானார்.
தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்ட போது, அவருடன், அ.தி.மு.க.,வில் இணைந்து, கட்சியின் பொதுச்செயலராகவும், நிதி அமைச்சராகவும் இருந்தார். 1980ல் மீண்டும், தி.மு.க.,வில் இணைந்து, பொதுச்செயலரானார். தமிழ், ஆங்கிலத்தில் பேசுவது, எழுதுவதில் புலமை பெற்றவர்.
இதனால் கட்சிக்காரர்களால், 'நாவுக்கரசர்' என, புகழப்பட்டார். 'சுடலையின் நடுவே, மதுரையில் மனோகரன், மேடும் பள்ளமும், நாஞ்சிலார் கவிதைகள்' உள்ளிட்ட நுால்களை எழுதியுள்ளார். 'முன்னணி, தென்னகம்' ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தார். தன், 71ம் வயதில், 2000, ஆகஸ்ட், 2ல் மறைந்தார்.
'மந்திரக்கோல்' மனோகரன் பிறந்த தினம் இன்று!

