
ஜனவரி 4, 1889
திருவண்ணாமலை மாவட்டம், மண்டகொளத்துாரில், சமஸ்கிருத வித்வான் கிருஷ்ண சாஸ்திரியின் மகனாக, 1889ல் இதே நாளில் பிறந்தவர், பதஞ்சலி சாஸ்திரி. இவரது தந்தை, சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் சமஸ்கிருத பண்டிதராக பணியாற்றினார்; அதனால் இவரும், அந்த கல்லுாரியில் பி.ஏ., முடித்தார்.
பின், சட்டக் கல்லுாரியில் படித்து, மாணவர்களுக்கு சட்டம் கற்பித்தார். இவர், வரிகள் குறித்த வழக்குகளை ஏற்று நடத்தி புகழ் பெற்றார். 1922ல், இவரது தலைமையில் யூனியன் வருமான வரி சட்டம் இயற்றப்பட்டது; தொடர்ந்து, வருமான வரி ஆணையரின் நிலையான வழக்கறிஞரானார்.
நீண்ட அனுபவத்துக்கு பின், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்து, ஒன்பதாண்டுகள் பணியாற்றினார். தற்போதைய உச்ச நீதிமன்றத்துக்கு இணையாக, அப்போதிருந்த பெடரல் நீதிமன்றத்தின் நீதிபதியாகி, தலைமை நீதிபதியாகவும் உயர்ந்து, இரண்டாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், 1963, மார்ச் 16ல், தன், 74வது வயதில் மறைந்தார்.
பிரிட்டிஷ் ஆட்சியில் சட்டத்துறையில் சாதித்த தமிழர் பிறந்த தினம் இன்று!