
ஜனவரி 13, 1949
பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில், 1949ல் இதே நாளில் பிறந்தவர் ராகேஷ் சர்மா. இவர் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் நிஜாம் கல்லுாரியில் படித்தார். நேஷனல் டிபன்ஸ் அகாடமியில் விமானப்படை பயிற்சி பெற்று, சோதனை பைலட்டாக தேர்வானார். வங்கதேச போரில், 'மிக் 21' விமான படை பைலட்டாக பணிபுரிந்தார்.
ரஷ்யாவின் கைகோனுார் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட, 'சல்யூட் டி11' என்ற ராக்கெட்டில், 1984, ஏப்ரல் 2ல், இரண்டு ரஷ்ய வீரர்களுடன் விண்வெளிக்கு பயணித்தார். சல்யூட் 7, ஆர்பிட் ஸ்டேஷனில் 7 நாட்கள் 21 மணி நேரம் இருந்த இவர், அப்போதைய பிரதமர் இந்திராவுடன் நியூஸ் கான்பரன்சில் பேசினார்.
அப்போது அவர், 'இந்தியா எப்படி உள்ளது?' என கேட்க, 'விண்வெளியில் இருந்து பார்க்கும் போது, உலகிலேயே இந்தியா தான் அழகாக உள்ளது' என்றார்.
'விங்' கமாண்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு அசோக சக்ரா விருதும், ரஷ்யாவின், 'ஹீரோ ஆப் த சோவியத் யூனியன்' விருதும் வழங்கப்பட்டன. தற்போது, நீலகிரி மாவட்டம், குன்னுாரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியரின், 74வது பிறந்த தினம் இன்று!