
ஜனவரி 18, 1996
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், நிம்மகுரு எனும் கிராமத்தில், 1923, மே 28ல் பிறந்தவர் நந்தமூரி தாரக ராமராவ் எனும் என்.டி.ராமராவ்.
இவர், குண்டூரில் உள்ள ஆந்திர கிறிஸ்துவ கல்லுாரியில் படித்தார். அரசுப் பணிக்கான தேர்வெழுதி, குண்டூர் மாவட்டத்தில் துணை பதிவாளராக பணியாற்றினார். கலை ஆர்வத்தால் அதை கைவிட்டு, திரைப்பட வாய்ப்பு தேடினார்.
'மனதேசம்' என்ற தெலுங்கு படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்தார். தமிழில், 'பாதாள பைரவி' படத்தில் அறிமுகமானார். 'கல்யாணம் பண்ணிப்பார், மாயா பஜார்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். சிவாஜி கணேசன் நடித்த, 'கர்ணன்' படத்தில், கிருஷ்ணராக வாழ்ந்து காட்டினார்.
பல படங்களில் கிருஷ்ணர் வேடமிட்டதால், இவரது படத்தையே கிருஷ்ணராக தெலுங்கு மக்கள் வழிபட்டனர். 'தெலுங்கு தேசம் கட்சி'யை துவங்கி, மூன்று முறை ஆந்திராவின் முதல்வரானார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நண்பரான இவர், சென்னைக்கு குடிநீர் வழங்க, கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் தர சம்மதித்தார். அதுவே, 'தெலுங்கு கங்கை திட்டம்' என அழைக்கப்படுகிறது. 1996ல் இதே நாளில், தன் 73வது வயதில் மறைந்தார்.
திரையிலும், அரசியலிலும் தெலுங்கு பேசும் மக்களை ஆண்ட என்.டி.ஆர்., மறைந்த தினம் இன்று!