
பிப்ரவரி 4, 2023
வேலுாரில், துரைசாமி அய்யங்கார் - பத்மாவதி தம்பதிக்கு மகளாக, 1945, நவ.,30ல் பிறந்தவர், கலைவாணி எனும் வாணி ஜெயராம்.
இவர், கர்நாடக இசை கற்றவர். சென்னை ராணிமேரி கல்லுாரியில் படித்து, பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றினார். ஜெயராமை மணந்தார். 1971ல், குட்டி என்ற ஹிந்தி படத்தில், பின்னணி பாடகியாக அறிமுகமானார். 1974ல், சில தமிழ் படங்களில் பாடினார். அவற்றில், தீர்க்க சுமங்கலி படம் முதலில் வெளியானது.
'மல்லிகை என் மன்னன் மயங்கும்...' பாடல் இவரது அறிமுகப் பாடலானது. தொடர்ந்து, 'ஏழு ஸ்வரங்களுக்குள், கேள்வியின் நாயகனே, கவிதை கேளுங்கள், என் கல்யாண வைபோகம்' உள்ளிட்ட பாடல்களை பாடி புகழ் பெற்றார்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் பாடி உள்ளார். கர்நாடக இசை, கஜல், பாப், நாட்டுப்புற இசை உள்ளிட்ட இசை வடிவங்களை, மிக லாவகமாக கையாண்டு பாடும் திறமை பெற்றவர். மூன்று முறை தேசிய விருது, பல்வேறு மாநில அரசு விருதுகளையும் பெற்றார்.
'பத்ம பூஷன்' விருது இவருக்கு அறிவிக்கப்பட்டு ஒரு வாரமே ஆன நிலையில், வீட்டில் வழுக்கி விழுந்து, தன், 78வது வயதில், 2023ல் இதே நாளில் மறைந்தார். 'ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி' மறைந்த தினம் இன்று!