
பிப்ரவரி 8, 1921
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில், முஹம்மது காசிம் மரைக்காயர் --- ருகையா பீவி தம்பதிக்கு மகனாக, 1921ல் இதே நாளில் பிறந்தவர் மு.மு.இஸ்மாயில்.
இவர் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, உறவினர்களால் வளர்க்கப்பட்டார். நாகூரில் பள்ளிப்படிப்பு, சென்னை மாநிலக் கல்லுாரியில் பி.எஸ்சி., கணிதம், சென்னை சட்டக் கல்லுாரியில் பி.எல்., படித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், சென்னை சட்டக் கல்லுாரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1980ல், தமிழகத்தின் தற்காலிக கவர்னராகவும் இருந்தார்.
தமிழக ஹஜ் சர்வீஸ் கமிட்டியின் தலைவராக இருந்த இவர், ஒரு இலக்கிய ஆர்வலர். ஏ.என்.சிவராமன், சா.கணேசன், அ.ச.ஞானசம்பந்தன், சி.எம்.அழகர்சாமி, பழ.பழனியப்பன் ஆகியோருடன் இணைந்து, சென்னை கம்பன் கழகத்தை உருவாக்கி, தன் ஆயுள் வரை அதன் தலைவராக வழிநடத்தினார்.
'கம்பராமாயணம் - சீறாப்புராணம் ஒப்பீடு, கம்பன் கண்ட சமரசம், கவிச்சக்கரவர்த்தியும் கவியரசரும்' உள்ளிட்ட நுால்களை எழுதிய இவர், 2005 ஜனவரி 17ல், தன் 83வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!

