
பிப்ரவரி 12, 2013
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துாருக்கு அருகில் உள்ள செங்கற்பட்டை கிராமத்தில், சங்கரலிங்கத்தின் மகனாக, 1914ல் பிறந்தவர் ஜெகந்நாதன். இவர், ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளி, மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் படித்தார். பட்டப்படிப்பை முடிக்கும் முன், காந்தியின் ஆசிரமத்தில் சேர விரும்பினார். அனுமதி மறுக்கப்பட்டதால், திருப்பத்துாரில் உள்ள கிறிஸ்தவ ஆசிரமத்தில் சேர்ந்து, பெங்களூரில், பட்டியலின மக்களுக்காக சேவை செய்தார். சமூக சேவகி கிருஷ்ணம்மாளை மணந்தார். இருவரும் இணைந்து, வினோபா பாவேயின், பூமி தான இயக்கத்தை செயல்படுத்தினர்.
நிலச்சுவான்தார்களிடம் நிலங்களை தானமாகப் பெற்று, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கினர். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் போது, ஊர்வலம் சென்றதற்காக, 15 மாத சிறை தண்டனை பெற்றார். 500 பேருடன், சென்னை மெரினா கடற்கரையில் தேசிய கொடியேற்றி சிறை சென்றார்.
சுதந்திரத்துக்கு பின், மதுரை மாவட்டம், கள்ளஞ்சேரியில், விவசாய நிலங்களை மீட்டார். நாகை மாவட்டம், கீழ்வெண்மணி கிராமத்தில் நடந்த தலித் படுகொலையில் பாதிக்கப்பட்டோருக்கு குடியிருப்பு கிடைக்க வழி செய்தார். இவர், தன், 99வது வயதில், 2013ல் இதே நாளில் மறைந்தார்.
'நோபல்' பரிசுக்கு இணையான, 'ரைட் லைவ்லிகுட்' விருதை பெற்ற தமிழக தியாகி மறைந்த தினம் இன்று!