
பிப்ரவரி 17, 1910
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில், சுப்பிரமணிய அய்யர் - நாராயணி தம்பதிக்கு மகனாக, 1910ல் இதே நாளில் பிறந்தவர், சீனிவாசன் எனும் கொத்தமங்கலம் சீனு.
இளமையிலேயே தந்தையை இழந்ததால், பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்து பெண் வேடத்தில் நடித்தார். புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் பகுதியில், நாடக சபா நடத்தி பாடகராகவும், நாடக நடிகராகவும் இருந்த கொத்தமங்கலம் சுப்புவுடன் இணைந்து, 'வள்ளி திருமணம்' நாடகத்தில் நடித்தார். அதில் புகழ் கிடைத்ததால் அங்கேயே தங்கி நடித்தார். அவர் பெயருடன் கொத்தமங்கலம் ஒட்டிக்கொண்டது.
'சரஸ்வதி கம்பெனி'யின் கிராம போன் ரெக்கார்டுகளால் புகழ் பெற்றார். 'டப்பிங்' வசதி இல்லாத அக்காலத்தில், பாடகர்கள் மட்டுமே நடிக்க முடியும் என்ற நிலை இருந்ததால், சாரங்கதாரா என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து, பட்டினத்தார், மணிமேகலை, திருமங்கை ஆழ்வார் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், 2001, ஆகஸ்ட் 30ல், தன் 91வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!