
பிப்ரவரி 21, 1906
சென்னையில், மல்லாகம் விஸ்வநாத பிள்ளையின் மகனாக 1855, மே 25ல் பிறந்தவர் கனகசபை பிள்ளை. இவரது தந்தை, இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். சென்னையில் குடும்பத்துடன் தங்கி, வின்சுலோ தொகுத்த ஆங்கில - தமிழ் அகராதி பணியில் துணையாக இருந்தார்.
கனகசபையும் சென்னையில் பிறந்து, சென்னை பல்கலையில் படித்து, மொழிபெயர்ப்பாளர், அஞ்சல் துறை அதிகாரி, மதுரையில் வழக்கறிஞர் உள்ளிட்ட பணிகளை செய்தார். பல ஊர்களில் பணியாற்றியதால் ஓலைச்சுவடிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு, அவற்றின் ஆய்வு கட்டுரைகளை, தமிழ், ஆங்கில இதழ்களில் எழுதினார்.
தான் சேகரித்த தகவல்களையும், ஓலைச்சுவடிகளையும் உ.வே.சாமிநாத அய்யரிடம் வழங்கி, பதிப்பிக்கும்படி கூறினார். இவரது, 'தி தமிழ்ஸ் 1,800 இயர்ஸ் அகோ' என்ற ஆங்கில ஆய்வு நுால் பெரிதும் பாராட்டப்பட்டது. உ.வே.சாமிநாத அய்யரின் கருவூலமாக திகழ்ந்த இவர், 1906ல் தன் 51வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
தமிழ் தொண்டர், நுாலாசிரியர், ஆய்வாளர், சுவடி சேகரிப்பாளராக வாழ்ந்த கனகசபை பிள்ளை மறைந்த தினம் இன்று!

