
பிப்ரவரி 26, 1919
ஈரோடு மாவட்டம், சின்னியம்பாளை யத்தில், குமாரசாமி கவுண்டர் - குப்பம்மாள் தம்பதியின் மகனாக, 1919ல், இதே நாளில் பிறந்தவர், எஸ்.கே.பரமசிவம்.
ஈரோடு ராமகிருஷ்ண வித்யாலயா, சென்னை மாநில கல்லுாரி, சட்ட கல்லுாரிகளில் படித்தவர். சுதந்திர போராட்டம் நடந்த போது, ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்ததால், கல்லுாரியிலிருந்து ஓராண்டு இடைநீக்கம் செய்யப்பட்டார். மாநில கல்லுாரி கால் பந்தாட்ட அணி தலைவராக இருந்த இவர், காங்கிரசில் இணைந்தார். முத்துக்கவுண்டன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக பத்தாண்டுகள் இருந்து, ஊரை முன்னேற்றினார். 1962ல், ஈரோடு எம்.பி.,யானார்.
சின்னியம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு வங்கி தலைவராகவும், ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவரா கவும், கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். வினோபாபாவேயின், 'பூமி தான' இயக்கத்தில் சேர்ந்து, தன் செழிப்பான, பல ஏக்கர் நிலத்தை ஏழைகளுக்கு தானமாக அளித்தார்.
பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி, பால் வள திட்டத்தை குரியன் தலைமையில் செயல்படுத்திய போது, தமிழகத்துக்கு இவரை தலைவராக தேர்வு செய்தார். பால் வள அபிவிருத்தி வாரிய பயிற்சி நிலையம், பால் பண்ணை, கால்நடை தீவன தொழிற்சாலை, பால் குளிரூட்டும் நிலையங்கள் உள்ளிட்டவற்றை, மாநிலத்தின் பல பகுதிகளில் துவக்கிய இவர், தன், 102வது வயதில், 2022, ஜனவரி 30ல் மறைந்தார்.
மாநிலத்தில் பால் வளம் பெருக்கிய, எஸ்.கே.பி., பிறந்த தினம் இன்று!

