
மார்ச் 11, 2013
தேனி மாவட்டம், சின்னமனுாரில், ஆசிரியர் வேலுச்சாமி - அழகம்மை தம்பதியின் மகனாக, 1925, ஜூன் 10ல் பிறந்தவர், 'வேதி' எனும், வே.தில்லைநாயகம்.
சின்னமனுார் அருகில் உள்ள கருங்கட்டான்குளம், உத்தமபாளையம் பள்ளிகள், மதுரை அமெரிக்கன் கல்லுாரி, சென்னை, நாக்பூர், டில்லி பல்கலைகளில் பொருளியல், கல்வியியல், நுாலகவியல் பாடங்களையும், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கில மொழிகளுடன், ஜோதிடவியலையும் படித்தார். 1949ல், தமிழக அரசு உதவியுடன், நுாலகர் பயிற்சி பெற்று, பொதுக்கல்வி துறை இயக்ககத்தின் முதல் நுாலகரானார். 1962ல், கன்னிமாரா பொது நுாலகத்தின் நுாலகரானார்; 1972ல் பொது நுாலகத்துறையின் முதல் இயக்குனரானார்.
'நுால் தொகைகள், குழந்தை நுால் தொகைகள், அறிமுக விழா மலர்கள்' உள்ளிட்டவற்றை பதிப்பித்தார். 40 ஆண்டுகள் சேகரித்த, 4,000 ஆண்டு தகவல்களை, 'இந்திய நுாலக இயக்கம்' என்ற நுாலாக வெளியிட்டார். அது, தமிழ் பல்கலை பரிசை பெற்றது. தமிழில் முதலில், 'குறிப்பேடு' எனும் ஆண்டு நுால், 'வேதியம் 1,008' உள்ளிட்ட, 25 சிறந்த நுால்களை எழுதியுள்ளார். 'வேதி, அமுதப்பையா, உலகப்பன்' எனும் புனை பெயர்களில் எழுதிய, வே.தில்லைநாயகம், தன், 87வது வயதில், 2013, இதே நாளில் மறைந்தார்.
தமிழக பொது நுாலக இயக்கத்தின் தந்தை மறைந்த தினம் இன்று!

