
மார்ச் 19, 2008
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு கிராமத்தில் ராதாகிருஷ்ணன் வேலாயுதம் நாயர் - கஸ்துாரி தம்பதியின் மகனாக, 1958, டிசம்பர் 11ல் பிறந்தவர் ரகுவரன்.
இவரது தந்தை, கோவையில் ஹோட்டல் தொழில் செய்தார். இவரும் அங்கேயே பள்ளி, கல்லுாரி படிப்புகளை முடித்தார். லண்டன் டிரினிட்டி கல்லுாரியில் பியானோ வாசிப்பிலும், சென்னை திரைப்படக் கல்லுாரியில் நடிப்பிலும் தேர்ச்சி பெற்றார்.
ஏழாவது மனிதன் திரைப்படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமானார். கதாநாயகனாக அறிமுகமாகி, வில்லனாக வளர்ந்தார். முடிவல்ல ஆரம்பம், சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட படங்கள் நல்ல புகழை தந்தன. வழக்கறிஞராக கலியுகம் போலீஸ் அதிகாரியாக தாய்மேல் ஆணை, ரவுடியாக கைநாட்டு, சிறப்பு தோற்றத்தில் அண்ணா நகர் முதல் தெரு, அஞ்சலி, சிவா உள்ளிட்ட படங்களிலும், வில்லனாக முதல்வன், முத்து, பாட்ஷா உள்ளிட்ட படங்களிலும் நடித்து பாராட்டப்பட்டார். போதை பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, தன் 50வது வயதில், 2008ல் இதே நாளில் மறைந்தார்.
குரலில் கரகரப்பு, விழிகளில் மிரட்டல், நடையில் முரட்டுத்தனம் என அசாத்திய நடிப்பை சாத்தியமாக்கிய நடிகர் மறைந்த தினம் இன்று!

