
மார்ச் 20, 1942
சிவகங்கை மாவட்டம், கடம்பங்குடியில், சுப்பையா சேர்வை - குஞ்சரம் தம்பதிக்கு மகனாக, 1942ல் இதே நாளில் பிறந்தவர் முத்துலிங்கம்.சிவகங்கையில் 10ம் வகுப்பு வரை படித்து, விவசாயம் செய்தார். சென்னை வந்து, 'முரசொலி' பத்திரிகையில் துணை ஆசிரியராக பணியாற்றினார். தி.மு.க.,வில் இருந்து எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்டபோது, இவரும் விலகி, 'அலை ஓசை' பத்திரிகைக்கு மாறினார்.
பொண்ணுக்கு தங்க மனசு படத்தில், 'தஞ்சாவூர் சீமையிலே...' என்ற பாடலை எழுதி, பாடலாசிரியரானார். எம்.ஜி.ஆர்., நடித்த பல படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.
எம்.ஜி.ஆர்., முதல்வரானதும், சட்ட மேலவை உறுப்பினர், அரசவை கவிஞர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். கிழக்கே போகும் ரயில், வயசு பொண்ணு ஆகிய பட பாடல்களுக்காக சிறந்த பாடலாசிரியர் விருதை பெற்றார்.
மொத்தம், 1,564 பாடல்களை எழுதியுள்ள இவர், கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 'தங்கத்தில் முகமெடுத்து, காஞ்சி பட்டுடுத்தி, மாஞ்சோலை, செந்துாரப்பூவே, சங்கீத மேகம்' உள்ளிட்ட காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை எழுதியவரது 82வது பிறந்த தினம் இன்று!

