அரிய வகை 'சருகு மான்' வேட்டை ஒருவர் கைது; 6 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
அரிய வகை 'சருகு மான்' வேட்டை ஒருவர் கைது; 6 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
ADDED : ஜன 17, 2024 07:52 PM

ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த, தும்பல் வனச்சரக பகுதியில், ஆத்துார் கோட்ட உதவி வனப்பாதுகாவலர் முருகன் தலைமையிலான வனச்சரக அலுவலர் விமல்குமார், வனவர் முத்தமிழ் உள்ளிட்ட குழுவினர், ஆய்வு செய்தனர்.
அப்போது, தும்பல், சின்னமூலப்பாடி காப்புக்காட்டில் நாட்டு துப்பாக்கி பயன்படுத்தி வன விலங்கு வேட்டையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த இடத்திற்கு, வனத்துறையினர் சென்றபோது, 12 பேர், ஏழு நாட்டு துப்பாக்கிகளுடன் இருந்தது தெரியவந்தது.
அவர்கள், ஆறு துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு ஓடினர். ஒருவரை மடக்கிப்பிடித்து, விசாரணை செய்தனர். விசாரணையில், சின்னமூலப்பாடியைச் சேர்ந்த, சுப்ரமணி, 50, என்பது தெரியவந்தது. அவரிடம், அரிய வகையைச் சேர்ந்த, இரண்டு அடி உயரம் கொண்ட 'சருகு மான்' இறந்த நிலையில் இருந்தது கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து, சருகு மான் வேட்டையில் ஈடுபட்ட சின்னமூலப்பாடி சுப்ரமணி, தாழ்வள்ளம் பழனிசாமி, செம்பரக்கை ராமன், கரியான்மாது, சத்யராஜ், கோவிந்தராஜ், ராமநாதன், குமார், சரத்குமார், மாது, மோதுார் சின்னபையன் உள்பட மொத்தம் 12 பேர் மீது, வழக்கு பதிவு செய்தனர்.
இதில், கைது செய்யப்பட்ட சுப்ரமணியை, ஆத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, ஆத்துாரில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து, வனத்துறையினர் கூறுகையில், 'பொங்கல் பண்டிகையில் வனவிலங்கு வேட்டை குறித்து ஆய்வு செய்தபோது, அரிய வகையைச் சேர்ந்ததும், வனவிலங்கு பட்டியலில் முதலிடத்தில் உள்ள சருகு மானை வேட்டையாடியுள்ளனர்.
வேட்டையில் ஈடுபட்ட 12 பேரில், ஒருவர் பிடிபட்டார். ஏழு துப்பாக்கியில், ஆறு துப்பாக்கி பறிமுதல் செய்துள்ளோம். தப்பியோடிய நபர்கள் பிடிப்பதற்கு, இரண்டு தனிப்படை அமைத்து தேடும் பணிகள் மேற்கொண்டு வருகிறோம். அரியவகை சருகு மான் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது' இவ்வாறு கூறினர்.

