ஒருவருக்கு ஒரு போலீசையா போட முடியும்: சுப்பிரமணியன்
ஒருவருக்கு ஒரு போலீசையா போட முடியும்: சுப்பிரமணியன்
ADDED : அக் 08, 2024 01:10 AM
சென்னை: வடகிழக்கு பருவமழைக்கு முந்தைய நடவடிக்கை குறித்த ஒரு நாள் கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
விமான சாகச நிகழ்ச்சியையொட்டி, இந்திய ராணுவம் மற்றும் தமிழக அரசின் சார்பில், பல்வேறு மருத்துவ குழுக்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தன. 40 இடங்களில் ஆம்புலன்ஸ்கள், 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர். விமானப் படை சார்பில் 100 படுக்கைகள் கேட்கப்பட்டிருந்த நிலையில், 1,000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும், 65 டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டனர். வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். எனவே, குடை, தண்ணீர், கண்ணாடி, தொப்பி ஆகியவை எடுத்து வரும்படி, விமானப்படை கூறியிருந்தது. 'வெயிலே இருக்காது; எல்லாரும் வாருங்கள்' என்று கூறவில்லை.
சாகச நிகழ்ச்சியை, 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர். அவ்வளவு பேர் கூடினாலும், நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்படவில்லை; அவற்றால் இறப்புகள் நடக்கவில்லை. வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு நடந்துள்ளது. ஐந்து பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளனர். இறப்பை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்; செய்ய நினைத்தால் தோற்று போவர்.
வெயிலின் தாக்கத்தால் 102 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஏழு பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்; மற்றவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
மெரினாவுக்கே வராதவர்கள், பூதக்கண்ணாடி வைத்து, நக்கீரர்கள் போல் அரசை குறை கூறுகின்றனர். வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில், வெயிலால் தான் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று கூறியும், அதை வைத்து குளிர் காயக்கூடாது.
மெரினாவில் 15 லட்சம் பேர் கூடிய நிலையில், ஒருவருக்கு ஒரு காவலரையா போட முடியும்? பாதுகாப்பு பணியில் 7,500 போலீசார் இருந்தனர். கனிமொழி குற்றச்சாட்டு குறித்து, அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
