காட்டு யானை தாக்கி ஒருவர் பலி: வன ஊழியர்களை தாக்கிய இருவர் கைது
காட்டு யானை தாக்கி ஒருவர் பலி: வன ஊழியர்களை தாக்கிய இருவர் கைது
ADDED : ஏப் 26, 2026 12:11 PM

கூடலூர்: கூடலூரில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, வன ஊழியர்களை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி ஆரூட்டுப்பாறை பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன் 45. இவர் நேற்று, இரவு 8.45 மணிக்கு, விநாயகர் கோவிலுக்கு செல்லும், தண்ணீர் குழாயை திறப்பதற்காக சென்றபோது, அங்கிருந்து காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து, அப்பகுதிக்கு சென்ற வனக்காப்பாளர் விஸ்வநாதன் மற்றும் 6 வேட்டை தடுப்பு காவலர்களிடம் அப்பகுதியை சேர்ந்த சிலர், வாக்குவாதம் செய்து தாக்கியதுடன், அவர்கள் சென்ற இரண்டு வனத்துறை வாகனங்களின் கண்ணாடிகளை சேதப்படுத்தினர். இதையறிந்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, நடந்த பேச்சுவார்த்தையின் போது, பொதுமக்கள் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் போலீசாரை தாக்க முயன்றனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், சுமூக தீர்வு ஏற்பட்டது. போலீசார் இறந்தவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, வன ஊழியர்களை தாக்கி வாகனத்தை சேதப்படுத்தியது தொடர்பான, புகாரில் கூடலூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியை சேர்ந்த, ஆறுமுகம், 40, மணிகண்டன், 29 ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
