ADDED : ஏப் 05, 2025 01:12 AM
சேலம்:தமிழகத்தில், ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு எழுதும், மாதிரிப் பள்ளி மாணவர்களுக்கு ஈரோடு மாவட்டம், பெருந்துறை, ஹிந்துஸ்தான் கல்லுாரியில் ஒருமாத பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில், மாவட்டத்துக்கு ஒரு மாதிரி பள்ளி செயல்படுகிறது. மாவட்டத்தில் சிறந்து விளங்கும் மாணவர்கள், அங்கு சேர்க்கப்பட்டு, நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி, 38 மாதிரி பள்ளிகளில் படித்த, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஜே.இ.இ., மெயின் தேர்வில் பங்கேற்றனர். அதில், 100க்கும் மேற்பட்டோர், அட்வான்ஸ்டு தேர்வு எழுத தேவையான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஜே.இ.இ., மெயின் இரண்டாம் கட்ட தேர்வு, வரும் 9 வரை நடக்கிறது.
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு, மே 18ல் நடக்க உள்ளது. எனவே, அரசு மாதிரி பள்ளி மாணவர்களுக்கு, ஈரோடு மாவட்டம், பெருந்துறை, ஹிந்துஸ்தான் கல்லுாரியில், ஏப்., 10 முதல், ஒரு மாத பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்லுாரியில் ஒரு மாதம் தங்கி, சிறப்பு ஆசிரியர்களின் பயிற்சி, கணினி வழியில் மாதிரி தேர்வு உள்ளிட்டவற்றில் மாணவர்கள் பயிற்சி பெற உள்ளனர். இதற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை, வரும் 9க்குள், பெற்றோர் ஒப்புதலுடன் அனுப்ப, மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.