ஒரே நாடு, ஒரே தேர்தல் பாதுகாப்புக்கு வழி வகை செய்யும்: தமிழக பா.ஜ., வலியுறுத்தல்
ஒரே நாடு, ஒரே தேர்தல் பாதுகாப்புக்கு வழி வகை செய்யும்: தமிழக பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : மே 26, 2025 05:35 PM

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கையானது,நம் நாட்டின் வளமையான எதிர்காலத்திற்கும் நாட்டு மக்களின் நேரம், ஆற்றல் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும் வழி வகை செய்யும் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“ஒரே நாடு, ஒரே தேர்தல்” முறை அமல்படுத்தப்பட்டால் அது ஒரே கட்சி தொடர்ந்து ஆட்சி அரியணையில் அமர்வதற்கு தோதாக அமைந்துவிடும் எனக் கூறுகிறார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.
ஆனால் அவரின் தந்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியோ தனது சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி” என்ற புத்தகத்தில், “அரசு இயந்திரங்களின் செயல்பாடு, நேரம் மற்றும் வளங்களை மீதப்படுத்தும் வகையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மீண்டும் அமல்படுத்தப்படுவது அவசியமானது' எனக் குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்திய 2024 ஆம் ஆண்டு தேர்தல்களில், நாடு முழுவதும் ரூ.1 லட்சம் கோடியை செலவழித்துள்ளோம். இதுவே ஒரே தேர்தலாக இருந்திருந்தால், குறைந்தபட்சம் ரூ.12,000 கோடியை சேமித்திருக்கலாம். அதன் மூலம் மக்கள் நலனுக்கான வளர்ச்சிப் பணிகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியிருக்கலாம். உண்மையில், 1967 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தான் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
எனவே, நம் நாட்டின் வளமையான எதிர்காலத்திற்கும் நாட்டு மக்களின் நேரம், ஆற்றல் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும் வழி வகை செய்யும் இந்த “ஒரே நாடு, ஒரே தேர்தல்” கொள்கையானது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு திறந்த மனதுடன் விவாதிக்கப்பட வேண்டியது.
இதுகுறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு தனது இனிய வருகையால் நம்மை கவுரவித்ததோடு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்திய ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு மீண்டுமொருமுறை என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

