உங்களில் ஒருவன்: பங்காளிகள் ஆட்சி மாறினாலும் தமிழகத்தின் காட்சிகள் மாறவில்லை
உங்களில் ஒருவன்: பங்காளிகள் ஆட்சி மாறினாலும் தமிழகத்தின் காட்சிகள் மாறவில்லை
ADDED : பிப் 06, 2024 02:38 AM

நெல் அறுவடைக்கு ஆனைகட்டிப் போரடித்த பெருமைக்குரிய விவசாய பூமியான வேலுார் மாவட்டம் அணைக்கட்டிலும், 1,500 வருடங்கள் பழமையான லட்சுமி நரசிம்மர் அருளும், திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலும், பகவான் ஸ்ரீராமரின் தந்தை தசரத மகாராஜா, குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்து வழிபட்ட பெருமைக்குரிய, புத்திர காமேட்டீஸ்வரர் அருள்புரியும் ஆரணி சட்டசபைத் தொகுதியிலும், மக்கள் எழுச்சியோடு பா.ஜ., பாதயாத்திரைப் பயணம் நடந்தது.
புவிசார் குறியீடு
அணைக்கட்டு தொகுதியில் அழிந்து போன நாகநதியை, இந்தப் பகுதியின் 21 கிராமப் பொதுமக்கள் கூடி மீட்டெடுத்ததைப் பற்றி பிரதமர் மோடி, தன் மனதின் குரல் நிகழ்ச்சியில் பெருமையாகக் குறிப்பிட்டார்.
இம்மண்ணின் பெருமையையும், மக்களின் பெருமையையும், இந்தியா முழுவதிற்கும் ஒரே நாளில் தெரியப்படுத்தினார்.
இங்குள்ள இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு வேண்டும் எனறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை பிரதமர் மோடி, கடந்த ஆண்டு அக்., 2022ல் நிறைவேற்றினார்.
ஒடுகத்துார் பகுதியில், 1,000 ஏக்கருக்கு மேல் கொய்யா சாகுபடி நடக்கிறது. நாள் ஒன்றுக்கு 1,000 டன் கொய்யாப் பழங்கள், விற்பனைக்குச் செல்கின்றன. ஒடுகத்துார் கொய்யாப் பழத்திற்கு புவிசார் குறியீடு வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதை தமிழக பா.ஜ., கட்டாயம் நிறைவேற்றித் தரும்.
ஊரறிந்த உண்மை
தி.மு.க., ஆட்சியில் சிறப்பாக நடைபெறுவது மணல் கொள்ளை மட்டும்தான் என்பது ஊரறிந்த உண்மை. ஆட்சியில் இருக்கும் தி.மு.க.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் பங்காளிக் கட்சி, சமீபத்தில் அணைக்கட்டில் மணல் கொள்ளை சம்பந்தமாக போராட்டம் நடத்தியது.
உடனே, தி.மு.க.,வினர், அவர்கள் மீது அணைக்கட்டு ஒன்றியம் கரடிகுடி ஊராட்சியில், 'கடந்த ஆட்சியில், சட்ட விரோதமாக கல் குவாரியில் கிராவல் மண், மண் கடத்தல், கிராவல் மண் கற்கள் திருட்டு உள்ளிட்டவைகள் வாயிலாக அரசுக்கு 200 கோடி ரூபாய் இழப்பு' என எதிர் குற்றச்சாட்டு வைத்தனர்.
பங்காளிகள் ஆட்சிகள் மாறினாலும், தமிழகத்தின் காட்சிகள் மாறவில்லை. கூட்டுக் கொள்ளையில் இரு தரப்பினரும் ஒன்றே.
போளூர் தொகுதிக்கு உட்பட்ட, ஜவ்வாது மலை அடிவாரத்தில், ஆண்டுக்கு 9,000 டன் சாமை உற்பத்தி செய்யப்படுகிறது.
பிரதமர் மோடி, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்து, சிறுதானியம் உண்பதை ஊக்குவிப்பதோடு, சிறுதானிய விவசாயிகளையும் கவுரவப்படுத்தினார்.
இதனால், சிறுதானிய உற்பத்தி 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆரணியில் மட்டும், 50,000 நெசவாளர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், பல முறை, ஆரணியைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டு, நாடு முழுதும் ஆரணியின் பெருமையைக் கொண்டு சேர்த்திருக்கிறார், பிரதமர்.
நெசவாளர்களுக்கு தனியாகக் கூட்டுறவு வங்கி
அடையாள அட்டை
தடையின்றி நுால் கிடைக்க, அரசு கொள்முதல் நிலையங்கள்
கூட்டுறவு சங்க கடனுக்கான வட்டி 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைப்பு
நெசவாளர் சேமிப்பு உதவித்தொகை 1,000 ரூபாய் என்பது 2,000 ரூபாயாக உயர்த்துதல் என, பல வாக்குறுதிகள் தி.மு.க.,வால் கொடுக்கப்பட்டன. ஆனால், எதையும் நிறைவேற்றவில்லை.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு, சொன்னதை செய்யும் பா.ஜ., ஆட்சி தமிழகத்திலும் மலர வேண்டும். அதற்கு அச்சாரமாக, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பா.ஜ., ஆட்சி ஏற்பட நாமெல்லாம் உறுதி ஏற்பதோடு, ஒன்று திரண்டு உழைப்போம்.
பயணம் தொடரும்...

