ADDED : பிப் 18, 2024 07:26 AM

சிவகாசி : விதிமீறலில் ஈடுபட்ட பட்டாசு ஆலையால் 10 பேர் உயிழந்த சம்பவத்தில் ஒருவர் இன்று(பிப்.,18) கைது செய்யப்பட்டார்.
விதிமீறலில் ஈடுபடும் பட்டாசு ஆலைகளுக்கு அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன் , கணேசன் எச்சரிக்கை விடுத்தனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன் பட்டிபட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பத்து பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், கணேசன் ஆறுதல் கூறினர்.
பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
தீபாவளிக்கு முன் இதே போல் ஒரு கோர விபத்து நடந்தது.
அதன்பின் அதிகாரிகள் ஆய்வு நடத்தி 30 பட்டாசு ஆலைகளை சீல் வைத்தனர். இதுபோல விபத்து தொடராமல் கண்காணிப்பை தீவிர படுத்த அறிவுறுத்தி உள்ளோம். உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். மனித தவறு காரணமாகவே விபத்து நடந்துள்ளது. மருந்து கலவை அறையில் இருவர் மட்டுமே பணிபுரிய வேண்டும். ஆனால் அங்கு கூடுதல் தொழிலாளர்கள் இருந்ததால் உயிர் சேதம் அதிகரித்துள்ளது.
விதி மீறலில் ஈடுபடும் ஆலைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விபத்தில் ஆலை உரிமையாளர், மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
தொழிலாளர் நலத்துறை சார்பில் பட்டாசு ஆலைகளுக்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் 850 ல் இதுவரை ஒரு விபத்து கூட நடக்கவில்லை என்றனர். கலெக்டர் ஜெயசீலன், எஸ்.பி.,பெரோஸ்கான் அப்துல்லா உடன் இருந்தனர்.
* பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று(பிப்.,18) பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக போர்மேன் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.