ADDED : ஏப் 05, 2025 01:39 AM
சென்னை:தமிழகத்தில், பிர்கா எனப்படும் வருவாய் குறுவட்டத்துக்கு ஒரு நில அளவையர் நியமிப்பதற்கான பணிகளில், அரசு ஈடுபட்டு உள்ளது.
புதிதாக, வீடு, மனை வாங்குவோர், சம்பந்தப்பட்ட நிலத்தின் அளவு, எல்லைகளை அறிய, நில அளவையர்களை அணுகுகின்றனர். இதற்காக, நில அளவை துறை சார்பில், தாலுகாவுக்கு ஒருவர் வீதம் நில அளவையர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலை பளு காரணமாக, இவர்களால் உடனுக்குடன் நில அளவை செய்ய செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு தீர்வாக, தாலுகாவுக்கு ஒரு நில அளவையர் என்பதை விடுத்து, பிர்கா எனப்படும் குறுவட்டத்துக்கு ஒருவரை நியமிக்க திட்டமிடப்பட்டது.
இதுகுறித்து, தமிழக நில அளவை துறை அலுவலர் சங்கத்தின் தலைவர் மகேந்திரகுமார் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, பல்வேறு தாலுகாக்களில் புதிய குறுவட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி வருகிறோம். இதன் அடிப்படையில், 17 மாவட்டங்களில், 50 புதிய குறுவட்டங்கள் உருவாக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.
அடுத்தக்கட்டமாக, குறுவட்டத்துக்கு ஒரு நில அளவையர் நியமிக்கும் நடவடிக்கைகள், அரசு தரப்பில் துவங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

