பள்ளி, கல்லுாரிகளில் இருந்து 100 மீட்டருக்குள் 3 வகை கடைகளை மட்டும் அனுமதிக்கலாம் சி.பி.ஐ., அதிகாரிகள் குழு அமைக்க ஐகோர்ட் உத்தரவு
பள்ளி, கல்லுாரிகளில் இருந்து 100 மீட்டருக்குள் 3 வகை கடைகளை மட்டும் அனுமதிக்கலாம் சி.பி.ஐ., அதிகாரிகள் குழு அமைக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : நவ 16, 2024 12:29 AM
சென்னை:'தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க, சி.பி.ஐ., மற்றும் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு கண்காணிப்பு குழுவை, மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும்.
'கல்வி நிறுவனங்களில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவுக்குள், எழுதுபொருள், மருந்து, உணவுப்பொருள் கடைகளைத் தவிர்த்து, வேறு எந்த கடைகளையும் அனுமதிக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண்ணுரிமை இயக்கம்
சென்னையில் குடிசைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, 'பெண்ணுரிமை இயக்கம்' சார்பில் தொடரப்பட்ட வழக்கில், துரைப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில், மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு, அடிப்படை வசதிகள் இல்லை என கூறப்பட்டது.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நான்கு இடங்களிலும் உள்ள வசதிகள் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, அட்வகேட் கமிஷனரை நியமித்தது.
அவர் ஆய்வு செய்து, தாக்கல் செய்த அறிக்கையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், அந்தப் பகுதிகளில் தாராளமாக கிடைப்பதாகவும், அங்கு போதை மறுவாழ்வு இல்லம் அமைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுஇருந்தது.
இதையடுத்து, அட்வகேட் கமிஷனரின் அறிக்கையை அமல்படுத்துவது குறித்து, அரசிடம் கருத்து கேட்டு தெரிவிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஇருந்தது.
இவ்வழக்கு, நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.ஜி.பி., தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, மனுவை தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
மாநிலத்தில் போதைப் பொருளை தடுக்க, ஏ.டி.ஜி.பி., இரண்டு ஐ.ஜி., மற்றும் மூன்று எஸ்.பி., தலைமையில், உயர் மட்ட சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ல் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட, 19 வெளிநாட்டவர்கள் உட்பட, 14,934 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 10,665 வழக்குகள் போடப்பட்டு உள்ளன.
கடந்த 2023ல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட, 14,770 பேருக்கு எதிராக, 10,256 வழக்குகள்; கடந்த ஆகஸ்ட் வரை, 9,750 பேருக்கு எதிராக, 6,053 வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.
விழிப்புணர்வு
போதைப் பொருள் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டவர்கள், 2022ல் 645 பேர், 2023ல் 504 பேர், கடந்த ஆகஸ்ட் வரை 533 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருளுக்கு எதிராக, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இடையே, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 'போதையில்லா தமிழ்நாடு' என்ற இணையதளம் சார்ந்த செயலி, துவக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதை பார்த்த நீதிபதிகள், அண்டை மாநிலங்களில் இருந்து கூரியர் வாயிலாக, போதைப் பொருட்கள் தமிழகத்துக்குள் நுழைகின்றன. மாவட்டம், தாலுகா அளவில், போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த, சட்ட பணிகள் ஆணைக்குழு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதைப்பொருள் புழக்கம் மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தும், போலீசாரின் நடவடிக்கையை மேற்பார்வையிட, சிறப்பு கண்காணிப்பு குழுவை, மத்திய, மாநில அரசுகள் அமைக்கவேண்டும்.
இக்குழுவில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி, சி.பி.ஐ., அதிகாரி, அரசு அதிகாரிகள் இடம் பெற வேண்டும். இக்குழுவில் இடம்பெற உள்ள அதிகாரிகள் விபரங்களை, மத்திய, மாநில அரசு, சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும். பள்ளி, கல்லுாரி நிர்வாகத்தின் ஒப்புதலுடன், எழுதுபொருள், மருந்தகம் மற்றும் ஸ்நாக்ஸ் கடைகள் அமைக்கலாம்.அது தவிர்த்து, கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் வேறு எந்த கடைகளையும் அமைக்க அனுமதிக்கக் கூடாது.
கல்வி நிறுவனங்கள் அமைந்திருக்கும் மண்டலத்துக்குள், அனுமதிக்கப்பட்ட கடைகள் என்ன என்பது குறித்த பட்டியலை, மாநில அரசு வழங்க வேண்டும்.போதைப் பொருள் விற்பனை குறித்து புகார் தெரிவிக்க, ஒவ்வொரு பள்ளி, கல்லுாரிகளிலும், உதவி எண்களை, தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும். புகார் பெட்டிகள் இருப்பதையும், அரசு உறுதி செய்ய வேண்டும்.
இது தொடர்பாக, பள்ளி நிர்வாகத்துடன், தாலுகா மற்றும் மாவட்ட அளவிலான சட்டப் பணிகள் ஆணையம், அவ்வப்போது கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

