371 ஊராட்சிகளே நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைப்பு: நேரு
371 ஊராட்சிகளே நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைப்பு: நேரு
ADDED : ஜன 09, 2025 05:47 AM
சென்னை : சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - செங்கோட்டையன்: கிராம ஊராட்சிகளை, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளோடு இணைக்கும் திட்டத்தில், கிராம மக்களுக்கு கிடைக்கும் பல்வேறு திட்டங்கள், அவர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படும். எனவே, கிராமங்கள் ஒன்று திரண்டு மனு கொடுக்கின்றன. இதை நிறுத்தி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் நேரு: தமிழகத்தில் 12,000க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியோடு இணைப்பது, வெறும் 371 ஊராட்சிகள் மட்டும்தான்.
இணைப்பதில் பிரச்னை இருந்தால், கலெக்டரிடம் எடுத்துக் கூற வேண்டும். அவர் வழியே பரிந்துரை அனுப்பினால், எந்த ஊரை சேர்க்கலாம், எந்த ஊரை சேர்க்கக் கூடாது என முடிவெடுக்கலாம்.
எந்த இடத்திலும், மாநகராட்சியோடு இணைக்க பிரச்னை செய்வதில்லை. நுாறு நாள் வேலை திட்டம் இல்லாமல் போய்விடும் என்கின்றனர்.
விளைநிலங்கள் இல்லாத இடத்தைதான், நகர்ப்புற உள்ளாட்சிகளோடு இணைக்கிறோம். கலெக்டர் தலைமையில் கமிட்டி அமைத்து, பல கூட்டங்கள் நடத்தி ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

