1 டன் கரும்பில் 62 கிலோ மட்டுமே சர்க்கரை உற்பத்தி மோகனுார் ஆலை நஷ்டத்திற்கு தள்ளப்படும் அபாயம்
1 டன் கரும்பில் 62 கிலோ மட்டுமே சர்க்கரை உற்பத்தி மோகனுார் ஆலை நஷ்டத்திற்கு தள்ளப்படும் அபாயம்
ADDED : டிச 28, 2024 08:10 PM
நாமக்கல்:''தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும், ஆலை நிர்வாகக் குளறுபடியாலும், ஒரு டன் கரும்பில் இருந்து, 62 கிலோ சர்க்கரை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
''இதனால், ஆலை நஷ்டத்திற்கு தள்ளப்படும் என்பதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,''என, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு செயலர் குப்புதுரை கூறினார்.
இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டம் மோகனுாரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு, நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களில் இருந்து கரும்பு அறுவடை செய்து கொண்டு வரப்படுகிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன், அதன் தேர்தல் வாக்குறுதியில், 'கரும்புக்கு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.
தொழில்நுட்பக்கோளாறு
ஆனால், ஆட்சிக்கு வந்தபின் நான்கு ஆண்டுகளில், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் தரவில்லை.
மத்திய அரசின் கொள்முதல் விலையில் இருந்து, ஊக்கத்தொகையை சேர்த்து, டன் ஒன்றுக்கு, 3,150 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இது, விவசாயிகளின் உற்பத்தி செலவுக்கு போதுமானதாக இல்லை.
தற்போது, அரவை பருவம் துவங்கி உள்ள நிலையில், மோகனுார் சர்க்கரை ஆலையில், 90,000 டன் கரும்பு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
டன் ஒன்றுக்கு, 62 கிலோ சர்க்கரை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. அதே கரும்பை தனியார் ஆலைக்கு கொண்டு சென்று அரவை செய்யும் போது, 82 கிலோ கிடைக்கிறது. ஒரு டன்னிற்கு, 20 கிலோ பற்றாக்குறை ஏற்படுகிறது. அதற்கு காரணம், மோகனுார் சர்க்கரை ஆலையில் உள்ள தொழில்நுட்பக் கோளாறே.
மோகனுார் சர்க்கரை ஆலையில், தினமும், 2,500 டன் கரும்பு அரவை செய்யும் நிலையில், 5,000 கிலோ சர்க்கரை உற்பத்தி குறைகிறது.
இதன் வாயிலாக, 1.75 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இது, ஆலை பொருளாதாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்துவதுடன், நஷ்டத்திற்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது.
கடந்த அரவை பருவத்தில், ஒரு டன் கரும்பில் இருந்து, 85 கிலோ சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சர்க்கரை கட்டுமானம்
தமிழகத்தில், மிக குறைந்த அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுவது இந்த ஆலையில் தான். அவற்றை ஆலை நிர்வாகம் சரி செய்ய வேண்டும். இதேநிலை நீடித்தால், ஆலை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, மோகனுார் சர்க்கரை ஆலை கரும்பு பெருக்க அலுவலர் சுப்புராஜ் கூறியதாவது:
ஆலையின் அரவை இயந்திரம் குறைபாடு காரணமாகவும், புதிதாக தானியங்கி மூலம் இயங்கக் கூடிய வகையில் மாற்றியதாலும், நிர்ணயித்த குறியீட்டைவிட மொலாசஸ், கரும்பு சக்கை, ஆலை கழிவுமண் அதிகளவில் செல்வதால், சர்க்கரை கட்டுமானம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
உற்பத்தித் துறையில், ஆலை அரவை மூலம் கிடைக்கும் கரும்பு சாறை சரியாக பதப்படுத்தாமல் வீணடிக்கப்படுவதாலும், சர்க்கரை கட்டுமானம் குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.