பழுத்த மரம் தான் கல்லடிபடும்: பா.ஜ., விமர்சனத்துக்கு சேகர்பாபு பதில்
பழுத்த மரம் தான் கல்லடிபடும்: பா.ஜ., விமர்சனத்துக்கு சேகர்பாபு பதில்
ADDED : மே 20, 2025 06:26 AM

சென்னை:
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: தி.மு.க.,வைச் சேர்ந்த நாங்கள் எவ்வித ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும் இல்லாமல், அமைதியாக இறைவனுக்கு தொண்டு செய்து வருகிறோம்.
துணை முதல்வர் உதயநிதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அன்னதானத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அது குறித்து, தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். துணை முதல்வர் கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்கின்றனர். பழுத்த மரத்தில் தான் கல்லடிபடும்.
துணை முதல்வர் புகழின் உச்சியில் இருகிறார். முதல்வரின் வழிகாட்டுதலோடு அவருக்கு, தோள் கொடுத்து சுமக்க தயாராக இருக்கிறார் என்பதைதான், இது போன்ற விமர்சனங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
எம்மதமும் சம்மதமே என்பதுதான் எங்கள் அடிப்படை கொள்கை. 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற இந்த ஆட்சியில், அன்னதானத் திட்டத்தை துவக்கி வைப்பதில், எந்தவிதமான தவறும் இல்லை.
இறை பசியோடு வருகின்ற பக்தர்களுக்கு, வயிற்றுப் பசியையும் போக்குகின்ற ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி. இதற்காகத்தான் அன்னதான திட்டம் துவங்கப்பட்டு, பல கோவில்களிலும் சிறப்பாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.